Cinema

‘சிஸ்டம்’ மாற்ற வந்திருக்கும் இன்னொரு படம் : ‘ராட்சசி’ விமர்சனம்

"சிஸ்டம் சரியில்ல, எல்லாத்தையும் மாத்தணும், ஒருத்தர் வந்து மாத்துவார்" என்ற டெம்ப்ளேட்டில் இன்னொரு படம் வந்திருக்கிறது.

ஜோதிகா நடிப்பில், கௌதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது 'ராட்சசி'.

தென்தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளிக்கூடம், அதில் எதுவுமே சரியில்லை. அதை தனியொரு மனுஷியாக சரிசெய்கிறார் ஜோதிகா. எப்படிச் செய்கிறார், அது அவருடைய சொந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதை.

ஜோதிகா தன் காஸ்ட்யூமுக்கு செட் ஆகும் கதைகளை மட்டும் தான் தேர்ந்தெடுப்பார் போல. 'சாட்டை' படத்தைப் போன்ற கதைதான் எனினும் அந்த எண்ணம் வராமலே ராட்சசியை ரசிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் ஜோதிகா, ஹரீஷ் பெரடி போன்றோரின் நடிப்பு. ஜோதிகாவின் காஸ்ட்யூம்தான் மாறவில்லையே தவிர, மாஸ் நாயகியாக மாறத் தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே பழக்கப்பட்ட கதை, அதே பழைய காட்சிகள், திரைக்கதை அமைப்பு என எல்லாமும் க்ளிஷேவாக இருக்கும்போது படத்தை காப்பாற்றுவது கேமரா, பின்னணி இசை மற்றும் எடிட்டிங்.

ஒரு பள்ளிக்கூடத்தை சுற்றித்தான் மொத்தப் படமும். ஆனாலும் போரடிக்காமல் படம் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய். படத்தில் ஜோதிகாவிற்கு சண்டைக்காட்சிகள் இருக்கிறது. அதை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது, காரணம் எடிட்டிங். மிக கச்சிதமான ஷார்ப் எடிட் செய்திருக்கிறார் எடிட்டர் பிலோமின்ராஜ். பாடல்கள் அத்தனை சிறப்பாக அமையவில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை எனர்ஜியும் ஜோதிகாவுக்கான காட்சிகளுக்கு கொடுத்திருக்கிறார் ஷான், அது ரசிக்கும்படியும் இருக்கிறது.

பாரதி தம்பியின் வசனமும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ஆனால் ஜோதிகா நிறைய நிறைய நிறைய பேசுகிறார். இப்படி மொத்த டீமும் சூப்பராக அமைந்திருக்கிறது, நல்ல திரைக்கதை கூட கைவந்திருக்கிறது. அந்தக் கதையை மட்டும் ஏன் இவ்வளவு க்ளிஷேவாக தேர்ந்தெடுக்க வேண்டும்?

உங்கள் மீது எந்த ஒரு பெரிய சலனத்தையும் ஏற்படுத்தாத ஜஸ்ட் லைக் தட் ஒரு படம் பார்க்க வேண்டுமா, தாராளமாக 'ராட்சசி’யைப் பரிந்துரைக்கலாம்.