Cinema
சிக்கலான கதை.. திரைக்கதையில் அத்தனை உழைப்பு : ‘Spiderman : Far From Home’ விமர்சனம்!
மார்வெல் காமிக்ஸ் தயாரித்து 2017-ல் வெளிவந்த Spider - Man Home Coming படத்தின் தொடர்ச்சி. மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ் பட வரிசையில் 23-வது படம்.
இந்த தொடர்ச்சியின் முந்தைய படங்கள் அனைத்தையும் பார்த்திருந்தால்தான் இந்தப் படத்தை சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற சிக்கல் அவ்வளவாக இல்லை. மார்வெல் படங்களைப் பற்றிய குறைந்தபட்ச அனுபவம் இருந்தாலே இந்தப் படத்தை ஜாலியாக பார்க்கமுடியும்.
பூமியில் உள்ள பஞ்சபூதங்களின் ஒரு வடிவில் அரக்கன் ஒருவன் மெக்ஸிகோவைத் தாக்குகிறான். அந்த நேரத்தில் அங்கு தோன்றும் க்வின்டின் பெக் என்ற சூப்பர் ஹீரோ அந்த அரக்கனைக் கொல்கிறார்.
அதே நேரம் நியூ யார்க்கில் பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் - மேன்) படிக்கும் பள்ளிக்கூடத்திலிருந்து, மாணவர்களை ஐரோப்பியச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறார்கள். மெக்ஸிகோவைத் தாக்கியது போலவே ஐரோப்பாவின் பல நகரங்களையும் பஞ்சபூத அரக்கர்கள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு பீட்டரின் உதவி தேவையென்றும் கூறப்படுகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார், அந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதே படத்தின் கதை.
ஸ்பைடர்மேன் படங்களை நாம் குழந்தையாக இருக்கும்போது கொண்டாடி ரசிப்போமல்லவா? அந்த இடத்திலிருந்து ஸ்பைடர்மேன் நகர்ந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இப்போது ஒரு முழு சூப்பர் ஹீரோவாக அவர் மாறிவிட்டார். எனவே அதற்கான கதை, கதைக்களம், வில்லன் என எல்லாமும் மாறியிருக்கிறது. சரியாகச் சொன்னால் இனி அயர்ன்மேனை ரசிப்பதுபோல் ஸ்பைடர்மேனை ரசிக்கலாம்.
அசாத்தியமான விஷூவல்களை 3D திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள். எந்த ஒரு இடத்திலும் பிசிறு தட்டவில்லை. ஒரு முழுமையான கூட்டு முயற்சி ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. குறிப்பாக ஒரு சிறுவன், இளைஞனாகி விட்டார், அவர் இனி ஒரு அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ. இதை நியாயப்படுத்த வைக்கப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், கிராஃபிக்ஸ் காட்சிகளும், கேமரா கோணங்களும் விசிலடித்து கொண்டாடும்படி சிறப்பானதாக வந்திருக்கிறது.
பாராட்டப்படவேண்டிய இன்னொரு விஷயம் திரைக்கதை. சூப்பர் ஹீரோ கதைகள் பெரும்பாலும் மிக நேரடியான புரிதலுக்கு எளிதான முறையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் சிக்கலான கதையைக் கையில் எடுத்து, திரைக்கதையில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். அது வெற்றியையும் தந்திருக்கிறது. மொத்த 2 மணி 10 நிமிடங்களும் சுவராஸ்யமாகவே செல்கிறது.
ஸ்பைடர்மேனாக நடித்துள்ள Tom Holland நடிப்பு அபாரம். அடுத்த Tony Stark-ஆக மாறும் அத்தனை வாய்ப்பும் தெரிகிறது. கதாநாயகியாக நடித்துள்ள Zendaya-விற்கு காதலைச் சொல்லாமலே காதலிக்கவேண்டிய வேலை. அந்த காட்சிகள் அனைத்திலும் அத்தனை சிறப்பான நடிப்பு. ரசிக்கவைக்கும் அழகு. மற்ற நடிகர்கள் பெரும்பாலும் நமக்கு நன்றாய்த் தெரிந்த பெரிய நடிகர்கள். அவரவர் வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
சூப்பர் ஹீரோ படங்களை பார்க்கும் மனநிலை இருக்கிறதா, தாராளமாக Spiderman : Far From Home பார்க்கலாம். கொண்டாடி ரசிப்பீர்கள்...
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?