Cinema
“பார்க்காத மனிதர்களைப் படமாக்க முடியாது” : அடூர் கோபாலகிருஷ்ணன் பிறந்ததின சிறப்பு பகிர்வு!
அடூர் கோபாலகிருஷ்ணன், மலையாள சினிமாவுக்குள்ளே கூட அடக்கிவிட முடியாதபடிக்கு வளர்ந்த ஒரு அடையாளம். உலக சினிமாக்களுக்கு மத்தியில் நம்முடைய மண்ணின், மக்களின் கதைகளையும் சினிமாக்களாக முன்வைக்கும் பிரதிநிதிகளில் முக்கியமான ஒருவர் அடூர். இன்று அந்தக் கலைஞனின் பிறந்தநாள். அவருக்கான வாழ்த்துகளுடன் அவரைப் பற்றிய சிறப்புப் பகிர்வு.
இவரின் முதல் திரைப்படம் `ஸ்வயம்வரம்’. இவரின் திரைப்பயணம் 47 வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் இயக்கியிருப்பதோ பன்னிரெண்டே படங்கள்தான். இத்தனை கொண்டாடப்பட வேண்டியவராகவும், எப்போதும் பேசப்படும் கலைஞனாகவும் இருக்க எண்ணிக்கை அளவிலான சினிமா தேவை இல்லை. அவர் என்ன படங்கள் இயக்கியிருக்கிறார், அவற்றின் சுவாரஸ்யம் என்ன என்பதெல்லாம் பார்த்து மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடிய அனுபவம். எனவே, பொதுவாக தன்னுடைய சினிமா, அவற்றின் உருவாக்கம், நடிகர் தேர்வு பற்றியெல்லாம் அடூர் ஏற்கெனவே பகிர்ந்து கொண்ட விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். அது ஒரு கலைஞனாக அவரைப் புரிந்து கொள்ள உதவியாகவும் கூட இருக்கும்.
தன்னுடைய எந்தப் படத்தின் கதையும் கற்பனையாக எழுதியதில்லை என்கிறார் அடூர். “நான் பார்த்த சம்பவங்கள், பாதித்த விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், வாசித்த புத்தகங்கள் என தொடர்பற்ற பல விஷயங்களில் இருந்துதான் என் படத்திற்கான கதை பிறப்பதாக எண்ணுகிறேன். என் கதையும் கதாபாத்திரங்களும், என் மண்ணையும் மக்களையும் சார்ந்தவையாகவே இருக்கும். நான் பார்க்காத உலகத்தை, மனிதர்களைப் பற்றி என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது” என தன் கதைகளின் பிறப்பிடத்தை பற்றி சொல்வார் அடூர்.
தன் கதைக்குப் பொருத்தமான, கதை மாந்தர்களைத் தேர்வு செய்வதில் ஒரு போதும் அவர் அசட்டையாக இருந்ததில்லை. கூடவே தன் படத்தை அலங்கரிக்க நட்சத்திர நடிகர்கள் வேண்டும் என்கிற பதற்றமும் அவரிடம் இல்லை. அதனாலேயே பிரபல நடிகர்களோ, அறிமுக நடிகர்களோ சரிவிகிதத்தில் அவரது திரைப்படங்களில் இடம்பெற்றார்கள். “நான் இயக்கிய 'அனந்தரம்’, 'மதிலுகள், 'விதேயன்’ ஆகிய மூன்று படங்களில் மம்முட்டியை நடிக்கவைக்கக் காரணம், அந்தப் பாத்திரங்களின் முகங்களும் உடல்மொழிகளும் அவருக்கு அப்படியே பொருந்தின.
அதே சமயம், சில கதாபாத்திரங்களுக்கு அறிமுக நடிகர்களை நடிக்கவைப்பதுதான் சினிமாவுக்கான நேர்மையாக இருக்கும். கமல்ஹாசனும் மோகன்லாலும் என்னதான் நல்ல நடிகர்கள் என்றாலும், சினிமாவில் அனைத்து வேடங்களிலும் அவர்களையே நடிக்கவைத்துவிட முடியுமா? உலகில் மிகச்சிறந்த நடிகன் என்று எந்தத் திரைக் கலைஞனையும் கூற முடியாது. ஒரு இயக்குநரைச் 'சிறந்தவர்’ என்று அவரின் ஒரு படத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம். ஆனால், ஒரு நடிகனை அப்படி இனம் காண முடியாது!'' என்பார் அடூர்.
நாடக பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் கூட சினிமாவுக்கான மொழி என்ன என்பதை அறிந்திருந்தார் அடூர். அதனாலேயே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான நடிப்பை எவ்வளவு இயல்பாக வாங்க முடியும் என்கிற தெளிவும் அவருக்கு உண்டு. படத்தில் நடிப்பவர்களிடம் முழுக்கதையும் சொல்வதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. “குறிப்பிட்ட காட்சிக் கோர்வைக்கு என்ன தேவையோ, அதை மட்டும் நடிப்பவர்களிடம் சொல்வேன். மொத்தக் கதையும் அவர்களிடம் சொல்வது, பல்வேறு விளக்கங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடும்” என்பார். அவரது திரைப்படங்களின் காட்சிகள் செழுமையாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
பன்னிரெண்டு முழு நீளத் திரைப்படங்கள் மட்டுமின்றி, ஆவணப் படமெடுப்பதில் கைதேர்ந்தவர். நிலம் சார்ந்த எதார்த்தத்தை, சமூகம் சார்ந்த பிரச்னைகளை, மனிதம் சார்ந்த மீறல்களை அதிகமாக ஆவணமாக்கியிருக்கிறார். ஒரு திரைப்படத்தை இயக்குவதை விட, ஆவணப்படம் இயக்குவது காலம் தாண்டியும் பேசவைக்கும். பொக்கிஷமாக இருக்கும். அதைக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் அடூர். அப்படி அவர் தந்தது 21 ஆவணப் படங்கள்.
ஒரு மண்ணின், மனிதர்களில் உணர்வுகளின் வழி சொல்லப்படும் கதைகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருக்கிறார் அடூர். படித்துக் கொண்டிருந்த காலத்தில் பார்த்த `பராசக்தி’ துவங்கி ஜெயகாந்தனின் `உன்னைப் போல் ஒருவன்’, எஸ்.பாலசந்தரின் `அந்த நாள்’, அமீரின் பருத்திவீரன் வரை பல தமிழ் படங்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் இந்த சினிமா ஆர்வம்தான் இன்னும் இவரை இயக்கிக் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம்.
வெகுஜன மக்கள் அடூரின் படங்களை ரசிக்க முடியாது என்கிற கருத்து ஒன்று உண்டு. ஆனால், அது பற்றிக் கேட்கப்படும்போது அவர் அளித்த பதில் வித்தியாசமானதாக இருந்தது. “ஒவ்வொரு முறை நான் படம் எடுக்கும்போதும், அது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என நினைத்தே எடுக்கிறேன். ஆனால், அதற்காக எந்த சலுகைகளும் தருவதில்லை. எனக்கென சில மதிப்பீடுகள் உள்ளன. அவை இல்லாமல் ஒரு படத்தை உருவாக்க நான் விரும்பவில்லை” என்கிறார்.
அடூர் முடிந்தவரை தன்னுடைய கலைக்கு நேர்மையாக இருக்கவே முயற்சித்தார். அதனாலேயே, தன்னுடைய படத்துக்காக கிடைக்கும் விருதுகளையும், பாராட்டுகளையும் பற்றிய அவரது பார்வை வேறு ஒன்றாக இருந்தது. “நான் விருதுகளையும் பாராட்டுகளையும் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், அந்த மேடைகளைவிட்டு இறங்கும்போதே, அந்த விருதுகளையும் மறந்துவிடுவேன். அதனால், அந்த விருதுகள் என்னிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை” எனச் சொல்வார்.
எட்டுவருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய `பின்னேயும்’ படம் 2016-ல் வெளியானது. அதன் பிறகு அவர் எந்தப் படமும் இயக்கவில்லை. சீக்கிரமே ஒரு அதிஅற்புதமான படத்துடன் வருவார் என்ற நம்பிக்கையுன், அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்வோம்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!