Cinema
அல்டிமேட் நடிப்பு, ஹாலிவுட் தரம்; ஆனால் திரைக்கதை...? - தனுஷின் பக்கிரி பட விமர்சனம்
The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக 'பக்கிரி' வெளியாகியுள்ளது. தனுஷின் ஹாலிவுட் என்ட்ரி என்ற பெருமிதத்துடன் பிரெஞ்சு நாவலான The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe என்பதைத் தான் ஹாலிவுட்டில் திரைப்படமாக மாற்றினார் கனடா நாட்டு இயக்குனர் கென் ஸ்காட்.
மும்பையில் வசிக்கும் ஒரு இளைஞன் தன் தாயிற்கும், தனக்கும் இருக்கும் ஒரு ஆசையை நிறைவேற்ற பாரீஸ் கிளம்பிப் போகிறான். அடுத்தடுத்து எதிர்பாராமல் அவன் சந்திக்கும் சிக்கல்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்கிறான், பல்வேறு விதமான மனிதர்களை சந்திக்கிறான். இவற்றிலிருந்து அவன் பெரும் அனுபவங்களே இந்த படம்.
பேருக்கு ஹாலிவுட் படம் என்றில்லாமல் உண்மையிலேயே ஹாலிவுட்டின் பெரிய ஸ்டார்கள் பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள பலர் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள். ஆனாலும் கதை தனுஷை சுற்றியே நகர்வதால் வேறு யாரும் மனதில் நிற்கவில்லை. விதிவிலக்கு தனுஷின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்த அந்த சிறுவன். சில காட்சிகளே வந்தாலும் அதிகமாக ரசிக்க வைக்கிறான்.
தனுஷ் இந்த படத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இதுவரையிலான அவர் படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறது இந்த நடிப்பு. பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத ஒளிப்பதிவு, இசையமைப்பு, கலை வடிவமைப்பு, பாடல்கள் என அனைத்தும் கிடைத்திருக்கிறது, நல்ல திரைக்கதையைத் தவிர.
மும்பையில் வசிக்கும் ஒரு ஏழை இளைஞன், அவனுக்கு இருக்கும் ஒரு ஆசை, அதை செய்யும்போது அவனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதிலிருந்து தப்பிக்க நினைக்கும்போதெல்லாம் அதிர்ஷ்டம் துணைநிற்பது, உலகின் எந்த நாட்டிற்கும் செல்வதற்கும் சுதந்திரம் தரும் கதையமைப்பு என பேப்பரில் படிப்பதற்கு அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் கதை திரைமொழிக்கு மாறும்போது அத்தனை சோர்வாக இருக்கிறது.
முதல் காட்சியிலேயே தனுஷ் மூன்று சிறுவர்களுக்கு தன் பயணக் கதையை சொல்ல தொடங்குகிறார். அதனாலேயே படத்தில் தனுசுக்கு ஏதேனும் ஆகிவிடும் என வைத்திருக்கும் காட்சிகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. தனுஷின் இந்த நீண்ட பயணத்திற்கு எந்த அழுத்தமான காரணமும் இல்லாமல் இருப்பதால் கதை எந்த நோக்கமும் அற்ற ஒரு இடத்திலேயே நகர்கிறது.
இப்படியான திரைப்பட சறுக்கல்கள் நிகழும்போதெல்லாம் இயக்குனர் பாலுமகேந்திரா சொல்வது தான் நினைவுக்கு வருகிறது. "ஒரு படைப்பு புத்தகமாகவே முழுமை பெற்றுவிட்டால், அதை திரைப்படமாக்குவதில் எந்த பயனுமில்லை" என்கிறார் அவர். ஒரு மென்மையான படம் என்பது, படம் பார்க்கும்போது அந்த மென்மையான உணர்வை பார்ப்பவர்களுக்கு கடத்த வேண்டும். அப்படியில்லாமல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துபோவதை மென்மையான படம் என்று சொல்லும் போக்கு அதிகரித்திருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு தமிழன் ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் என்ற உணர்வை கொண்டாடும் எண்ணம் உள்ளவர்கள் தாராளமாக இந்த படத்திற்கு செல்லலாம்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு