Cinema
சென்டிமென்ட் Sci-Fi த்ரில்லர் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறதா? : ‘கேம் ஓவர்’ விமர்சனம்!
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘இஷ்க்’ திரைப்படத்தைப் பார்த்தபோது, இந்த மாதிரியான ஒரு எளிய கதையும், அதே நேரத்தில் மிக வலுவான திரைக்கதையையும் வைத்து சிறந்த த்ரில்லர் படங்கள் தமிழில் வரவில்லையே எனத் தோன்றியது. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது ‘கேம் ஓவர்’.
கதாநாயகிக்கு இருக்கும் ஒரு உளவியல் பிரச்சினைதான் மொத்த திரைப்படம். அதில் கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் திரைக்கதை அறிவியல் என எல்லாவற்றையும் சேர்த்து மிகத் தரமான 'மூச்சை இழுத்துப் பிடிக்க வைக்கும்' ஒரு த்ரில்லரைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஷ்வின்.
ஹிந்தியில் சில படங்களிலேயே தரமான நடிப்பைத் தந்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட டாப்ஸி தான் படத்தின் கதாநாயகி. மொத்தப் படமும் இவரைச் சுற்றியே நடக்கிறது. உண்மையாகவே படத்தின் எந்த ஃப்ரேமை எடுத்தாலும் அதில் டாப்ஸி இருப்பார். ஆனால் கொஞ்சமும் சலிக்கவில்லை. அத்தனை நேர்த்தியான நடிப்பு. கதையின்படி அவருக்கு இருக்கும் உளவியல் பிரச்சினையை அவர் வெளிப்படுத்தும் விதம், வேகமாக நடந்துகொண்டே இருப்பது. அந்த நடையிலேயே அத்தனை பயம் கூட்டுகிறார். படம் முழுக்க தனக்கு வைக்கப்பட்டிருக்கும் ஃப்ரேமிலிருந்து வெளியே போய்க்கொண்டே இருக்கும் அந்த மேனரிசம் ‘வேற லெவல்’. இப்படியான வித்தியாசமான கதைகளைத் தயங்காமல் தேர்ந்தெடுத்து இன்னும் நிறைய படங்கள் முயற்சி செய்யலாம்.
மொத்தமாகவே ஐந்தாறு நடிகர்கள்தான் படத்தில் என்பதாலோ என்னவோ எல்லோரும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள். வினோதினி வழக்கம்போலவே கவனிக்க வைக்கிறார்.
படத்தின் பெரும்பலம் திரைக்கதை அமைப்பு. ஒரு புதிய நோயைப் பற்றியோ, அல்லது ஒரு புது அறிவியலைப் பற்றியோ படம் இயக்கும்போது, அதைப் பற்றி விளக்குவதற்காக முதலிலேயே ஒரு காட்சி வைத்து வகுப்பு எடுக்கும் பம்மாத்து வேலையெல்லாம் செய்யாமல், படம் பார்க்க வருபவர்களை முழுதாக நம்பி இறங்கி அடித்திருக்கிறார்கள் அஷ்வின் - காவ்யா ராம்குமார் கூட்டணி. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் கையில் எடுத்திருக்கும் திரைக்கதை உத்தி கொண்டாடி ரசிக்கவைக்கிறது. படத்தின் நீளத்தை மிகக் குறைவாக வைத்துக்கொண்டதும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் வசந்தகுமாரின் ஒளிப்பதிவு. பெரும்பாலும் லோ ஆங்கிள் ஷாட் வைத்து காட்சிகளை பிரம்மாண்டம் ஆக்குவது, வெறும் கேமரா தந்திரங்களை வைத்தே படத்தின் முக்கியத் தேவையான வீடியோ கேம் உணர்வைத் தந்துவிடுவது என ஆச்சர்யப்படுத்துகிறார். முக்கியமாக சிசிடிவி, கையடக்க கேமரா இரண்டையும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாகவே மாற்றியிருக்கிறார்.
ரான் ஏத்தன் யோகனின் பின்னணி இசை எந்த இடத்திலும் உறுத்தாமல் படத்தின் உணர்வுக்கு துணை நிற்கிறது. பல இடங்களில் வீடியோ கேம்களின் இசையையே பின்னணி இசையாக மாற்றியிருக்கிறார். அதுவும் ‘செம’. ஆனால் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சத்தங்களே பெரும்பாலான இடங்களில் பின்னணி இசையாக மாறிவிடுகிறது. அந்த அளவிற்கு மிகக் கவனம் எடுத்து வேலை செய்திருக்கிறார்கள்.
த்ரில்லர் படங்களின் தூணாக இருக்க வேண்டியது எடிட்டிங். பொதுவாக இதுபோன்ற படங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் கட் செய்வதே வழக்கமாக இருக்கும் நிலையில் ரிச்சர்ட் கெவின் அப்படி செய்யாமல் நிறுத்தி நிதானமாக காட்சிகளை நமக்குள் ஊடுருவவிட்டு எதிர்பார்க்காத நேரத்தில் கட் செய்யும் உத்தியை பயன்படுத்தியிருப்பது அபாரம்.
இவற்றைப்போலவே இன்னொன்றையும் குறிப்பிடலாம். அது படத்தின் ஆடை வடிவமைப்பு. காட்சி ஏற்படுத்தப்போகும் உணர்வை, கதாபாத்திரங்கள் உடுத்தும் ஆடை முதலிலேயே தந்துவிடுகிறது. படம் மூன்று மொழிகளில் வெளியாகும், அதே நேரத்தில் எளிமையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் நேர்த்தியாய் மனதில் வைத்து ஆடை வடிவமைப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
சில படங்களை திரும்பத் திரும்பப் பார்க்கும்போதெல்லாம் புதிதுபுதிதான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அப்படியான ஒரு அனுபவத்தை மூன்று, நான்கு முறைகளுக்கு மேல் பார்க்கும்போதும் தரும். காரணம், படத்தில் அத்தனை அறிவியலும் மிகச் சரியாக கைகொடுத்திருக்கிறது.
- இனியவன்
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!