Cinema
“காதல்தான் மனிதகுலத்தையே ஆசிர்வதிக்குது!” - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்
படத்தின் துவக்கத்தில் சிறுமியாக இருக்கும் மெஹந்தி தன்னுடைய பாட்டியிடம் கதை சொல்லச் செல்லி கேட்பாள். அது அவள் பலமுறை முன்னமே கேட்ட கதைதான். ஆனால், ஒவ்வொருமுறையும் புத்தம்புதுசாக கேட்பது போல கேட்பாள். அந்தக் கதையில் ஒரு இளவரசி இருப்பாள். அவள் பெயரும் மெஹந்திதான். அந்த மெஹந்தி - மலைதேச இளவரசன் காதல் கதை ஒரு சோகமான சம்பவத்தில் முடியும். பலமுறை கேட்டு வருத்தப்பட்ட அந்த முடிவை கேட்டு மறுபடியும் புத்தம் புதுசாக சோகமாவாள் மெஹந்தி. கிட்டத்தட்ட அந்த மெஹந்தி நாம்தான். நம்மிடமும் தொடர்ந்து பல காதல் கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது, நாமும் ஒவ்வொரு கதையையும் புதிதாக கேட்பது போல் “ஆங் அப்பறம் என்னாச்சு” என கண்கள் விரிய பல காதல் சினிமாக்கள் பார்க்கிறோம். அந்த சலிக்காத காதல் கதையை மீண்டும் ஒரு முறை களத்தையும் மனிதர்களையும் மாற்றி உணர்வுப்பூர்வமாக சொல்கிறது மெஹந்தி சர்க்கஸ்.
கொடைக்கானல் பூம்பாரை கிராமத்தில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்). அந்த கிராமத்துக்கு சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தி சர்கஸ் ட்ரூப். அந்த குழுவில் இருக்கும் மெஹந்தியை (ஸ்வேதா த்ரிபாதி) பார்த்ததும் ஜீவாவுக்கு காதல். மெல்ல மெல்ல மெஹந்திக்கும் ஜீவா மேல் காதல் வர அவனிடமும் வெளிப்படுத்துகிறாள். ஜீவாவின் அப்பா ராஜாங்கம் (மாரிமுத்து) “வாழ்றது வனமா இருந்தாலும், சேர்றது இனமா இருக்கணும்டா” என தீவிரமாக ஜாதி வெறியில் ஊறியவர். போதாதற்கு மெஹந்தியின் தந்தைக்கும் காதல் மேல் நம்பிக்கை இல்லை. இந்த தடைகளை மீறி இந்த காதல் ஜோடி செய்யும் முயற்சிகள் என்ன? அவர்களின் கதி என்ன ஆகிறது என்பதுதான் கதை.
படத்தின் ஷோ ஸ்டீலர் மெஹந்தியாக நடித்திருக்கும் ஸ்வேதா த்ரிபாதிதான். இந்தியும் தமிழும் கலந்து அவர் உச்சரிக்கும் வசனங்கள், கண்கள் விரிய உற்சாகமாகப் பார்ப்பது, இதெல்லம் சரி வராது... நம்மளால சேர்ந்து வாழ முடியுமா என தயங்கி பேசுவது, பிரிவுக்கு வருந்துவது என அட்டகாசமான நடிப்புடன் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். ஜீவாவாக நடித்திருக்கும் ரங்கராஜ் நடிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. எந்த சூழலுக்கும் பொருந்தும்படியான ஒன்றிரண்டு எக்ஸ்பிரஷன்கள் மட்டுமே அவர் முகத்தில் பார்க்க முடிகிறது. ஆனால், அதை சமாளிக்குப்படி மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு இருப்பதால் பெரிய குறை ஒன்றும் தெரியவில்லை. இராஜாங்கமாக வரும் மாரிமுத்து பெரிய ஸ்க்ரீன் ஸ்பேஸ் இல்லை என்றாலும் தான் வரும் காட்சிகளில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார். வழக்கமாக கரடுமுரடான பாத்திரங்களில் பார்த்துப் பழகிய வேலராம மூர்த்தி, பாதிரியார் அமல்தாஸ் ரோலில் பார்க்க சிறப்பாக இருந்தது. மெஹந்தியின் தந்தையாக நடித்த சன்னி சார்லஸ், ஜாதவ் கதாபாத்திரத்தில் நடித்த அன்சுர் விகாஷ், மெஹந்தியின் மகளாக நடித்திருந்த பூஜா என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். விக்னேஷ் காந்தின் காமெடி லைனர்கள் அவ்வளவு ஒர்க் அவுட்டாகவில்லை, கூடவே அவரது நடிப்பும் செயற்கைத்தனமாக இருந்தது உறுத்தல்.
மறுபடியும் ஒரு காதல் கதையைத் தான் சொல்கிறோம். ஆனால் அதில் என்னவெல்லாம் ஃப்ரெஷ்ஷாக கொடுக்கமுடியும் என நிறைய சேர்த்து அதை பக்காவாக செய்தும் முடித்திருக்கும் இயக்குநர் சரவண இராஜேந்திரன் சிறப்பான அறிமுகம். சர்க்கஸில் கத்தி விளையாட்டில் நிற்கும் மெஹந்தி, “ஏசப்பா என்ன சொல்றார், லவ் பண்ணுங்கப்பானு சொல்றார்” என சொல்லும் பாதிரியார் என கதையை எந்த அளவுக்கு புதிதுபடுத்தி சொல்லமுடியுமோ அவ்வளவு உழைத்திருக்கிறது டீம். ”காதல்தான் மனிதகுலத்தையே ஆசிர்வதிக்குது”, ”மனசுல இருக்கறவன்தான் புருசன். உடம்புக்கெல்லாம் உறவு கிடையாது”, “ஒரு மாசம் முன்னால வரை உன்னயாருனே எனக்குத் தெரியாது. ஆனா, இப்போ உன்னவிட்டா எனக்கு யாருமே கிடையாது. அதுதான் இப்போ பயமா இருக்கு”, ”இந்த உலகமே ஒரு சர்க்கஸ்தாண்டா, ஒவ்வொருத்தன் தலைக்கு மேலையும் ஒரு கத்தி தொங்குது. உங்கப்பாக்கு ஜாதி, உனக்கு மெஹந்தி, காதல், எனக்கு ஏசப்பா” எனப் படம் முழுக்க தன்னுடைய கவனிக்கதக்க வசனங்களை நிறைத்திருக்கிறார் ராஜுமுருகன். கூடவே, ஜாதிய ஒடுக்குமுறை பற்றிய காட்சி, கன்வெர்டட் க்ரிஷ்ஸ்டியன் பிரச்சனை போன்றவற்றையும் எந்த துருத்தலும் இல்லாமல் படத்தில் பேசியது சிறப்பு.
ஷான் ரோல்டனின் பிரமாதமான பின்னணி இசையும் பாடல்களும் படத்தை மிகவும் வலுப்படுத்துகிறது. யுகபாரதியின் பாடல் வரிகளும் அத்தனை அழகு. கூடவே படத்தில் பின்னணியாக நிறைய இளையராஜா ரெஃபரன்ஸைப் பயன்படுத்தியிருந்த விதமும் அருமை. 1992ல் நடப்பது போன்ற களம், ஜீவா `ராஜகீதம்’ என்ற பெயரில் ஒரு கேசட் கடை வைத்திருப்பார். கையில் பட்டியலோடு கேசட்டில் பாடலைப் பதிவு செய்ய ஒரு கூட்டம் கூடும். இளையராஜாவை கதையோடு அவ்வளவு இயல்பாக சேர்ப்பதற்கு வேறு என்ன வாய்ப்பு வேண்டும்? குறிப்பாக பாப்பா லாலி பாடலை காதலர்களுக்கான தீம் சாங் போல மாற்றியிருந்ததும் அழகு. அதே இளையராஜாவை வைத்து நாயகனுடைய மனநிலையை விளக்கியிருந்த விதமும் சிறப்பு. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு, சதீஷ்குமாரின் கலை இயக்கம் இரண்டும் சேர்ந்து 90களுக்கான சூழலை திரையில் விரியவைத்திருக்கிறது.
மிக அழகான, எளிமையான ஒரு காதல் கதையை எந்த பிசகலும் இல்லாமல் அழுத்தமான உணர்வுடன் பதிவு செய்த விதத்தில் நிச்சயம் `மெஹந்தி சர்க்கஸ்’ கண்டு, பெற்றுவர வேண்டிய அனுபவம்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?