Cinema
இயக்குநர் மகேந்திரன் - காலம் தாண்டி நிற்கும் தகிப்பு!
“அவர் மறைந்துவிட்டார், இனி இல்லை, அவர் படைப்புகளுக்குள்ளேயே நாம் அவரைத் தேடப் போகிறோம்” என்று மிகுந்த கவலையுடன் பெருமூச்சு விட்டதும் மறந்து போகும்படியானவர் இல்லை மகேந்திரன். மிக நிரந்தரமான ஒருவராகவே அந்தக் கலைஞனை அணுகவேண்டும்.
மகேந்திரன் சினிமாக்களுக்கு என ஒரு தன்மை உண்டு. நகலெடுக்க முடியாத தன்மை. மிக உச்சத்துக் போன பல இயக்குநர்களுடைய சாயலை, வேறு எந்த இயக்குநராலும் கைபற்றி தன்னுடைய கதையை அதற்குள்ளே புகுத்தி படம் பண்ணி விட முடிந்தது. அதற்கு பல உதாரணங்கள் கூட இங்கு உண்டு. ஆனால், மகேந்திரன் ஒரு கதையைக் கையாளும் விதமும் அதைக் காட்சியாக்கும் விதமும் அந்த வசதி கொண்டதாக இருந்ததில்லை. அப்படி இருந்திருந்திருந்தால், “ `உதிரிப்பூக்கள்’ல மகேந்திரன் பண்ணியதை எந்த இடத்திலாவது நான் நெருங்கிவிட்டால் மிகப்பெரிய மகிழ்ச்சி கொள்வேன்” என்று மணிரத்னம் சொல்லியிருக்கமாட்டார்.
இப்படி நாம் கொண்டாடும் ஒரு கலைஞன், சினிமா மீது பெரிய அதிருப்தி கொண்டிருந்தார் என்பதுதான் முரணே. “வழக்கமாக சினிமாத்துறைக்கு வரும் எல்லோரும் சினிமா மீது மிகப்பெரிய கனவுகளோடும், ஆர்வத்தோடும் வருவாங்க. ஆனா, நான் அப்படி வந்தவன் கிடையாது. பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும், வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் நினைத்தேன்.
ஒரு காட்சி ஊடகமாக சினிமா இருக்கவேண்டும். காட்சிகளால் நகரவேண்டும் என்று நினைத்தேன். எனக்கிருந்த ஒவ்வாமைகளை எல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படங்கள்தான் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ போன்றவை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். அது இத்தனை கொண்டாடப்படுவது உண்மையில் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.” என்பார் மகேந்திரன்.
எந்தத் தமிழ் சினிமாவின் மீது அதிருப்தியோடு இருந்தாரோ, அதற்கு தன்னளவிலான சிகிச்சையோடு வந்தார். இல்லை என்றால் ‘முள்ளும் மலரும்’ காளியின் கதாப்பாத்திரத்துக்குள் இருந்த ஈகோவை எவரால் இவ்வளவு அதிர்வுகளோடு காட்டியிருக்க முடியும்? உதிரிப்பூக்கள் சுந்தரவடிவேலுவின் மேலிருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் மீறி, அவரின் ஒரு வசனத்தால் நடுக்கத்தை உண்டாக்க யாரால் முடியும்? ஜானி - அர்ச்சனாவின் அன்பை அலங்கார வார்த்தைகள் எதுவுமே இல்லாமல் யாரால் உணர்த்தியிருக்க முடியும்? 12 படங்களேதான் இயக்கியிருக்கிறார். ஆனால், அவை உண்டாக்கியிருந்த, இப்போதும் உண்டாக்கிக் கொண்டிருக்கிற தகிப்பு ஒன்றை எப்படி மறைக்க முடியும்.
“திரைக்கதை எழுத நான் யாரிடமும் போய் கற்றுக் கொள்ளவில்லை. நாவல், சிறுகதைகளை எப்படி சினிமா ஆக்குவது என்பதையும் நான் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், கு.ப.ரா., சூடாமணி இவர்களுடைய படைப்புகளைப் படித்தபோது என்னை அறியாமலே அவை எல்லாம் என்னைச் செதுக்கின. அவர்களுடைய அணுகுமுறை, மனித உணர்வுகளைக் கையாளும் விதம், சுற்றியுள்ளவர்களைப் பார்க்கும் விதம் எல்லாமே எனக்குள் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.
உண்மையில், சினிமாவை இவர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும்தான் கற்றுக்கொள்ள வேண்டும். யதார்த்தம், அழகுணர்ச்சியோடு சொல்லுதல் இதெல்லாம் மிக முக்கியம். அழகுணர்ச்சி என்பதற்காக மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களின் கண்கொண்டு பார்த்தாலே இயல்பான அழகுணர்ச்சி வசப்படும்” என்பார் மகேந்திரன்.
மகேந்திரன் சினிமாவின் மீது மட்டுமல்ல, மனிதர்கள் மீதும் எப்போதும் மிகுந்த மரியாதையோடே இருந்தார். அவருக்கு நெருக்கமான பலரும் சொல்வது, அவரோடு பேசுவது மிகவும் அற்புதமான அனுபவம் என்பதுதான். எதிரிலிருப்பவர் மூத்தவரோ, இளையவரோ சார் அல்லது பெயருக்கு முன்னால் மிஸ்டர் சொல்லி அழைப்பார். பிறகு அவரது உலகம் நிறைய அன்பு கொண்ட மனிதர்களால் ஆனது. தனக்கு எத்தனையோ ஹிட் கொடுத்த இயக்குநர்கள் இருந்தும், தன்னை அறிமுகப்படுத்திய பாலச்சந்தரிடமே, தன் மனதுக்கு பிடித்த இயக்குநர் என மகேந்திரனைக் குறிப்பிட்டார் ரஜினி.
‘முள்ளும் மலரும்’ படத்தில் ஒரு முக்கியக் காட்சி எடுக்க பணநெருக்கடி ஏற்படுகிறது. தயாரிப்பாளர் பணம் அளிக்க முடியாது எனக் கூற கமல்ஹாசன் அந்தக் காட்சியைப் படமாக்கும் செலவை ஏற்றுக் கொள்கிறார். மகேந்திரன் மிகவும் நேசித்த இன்னொருவர், மறைந்த ஒளிப்பதிவாளர் அஷோக்குமார். மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’, 'ஜானி’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'மெட்டி’ 'நண்டு’... போன்ற படங்களின் ஆன்மாவாக நிறைந்திருந்தது அஷோக்குமாரின் ஒளிப்பதிவு. இவ்வளவு ஏன், தன்னுடைய தேவ.அலெக்ஸாண்டர் என்கிற பெயரை உதறிவிட்டு, தான் மிகவும் ரசித்து வியந்து ஆச்சர்யப்பட்ட விளையாட்டு வீரர் எல்.ஜி.மகேந்திரனின் பெயரை, தன்னுடைய பெயராக மாற்றும் அளவுக்கு மகேந்திரன் ஒவ்வொருவரிடமும், ஒவ்வொருவரும் மகேந்திரனிடமும் அன்பு கொண்டிருந்தனர்.
`தெறி’ படத்தில் நடித்திருந்த சமயத்தில் அளித்த பேட்டியில், தான் எடுக்க விரும்பும் அடுத்த படம் பற்றிய முயற்சியைக் கூறி இருந்தார் மகேந்திரன். ”என்னுடைய கனவு புராஜெக்ட் ஒண்ணு இருக்கு. ஹீரோயினை மையப்படுத்தின கதை. பேரன் பேத்தி எல்லாம் எடுத்த ஹீரோ - ஹீரோயின். ஹீரோயின் மேல பயணிக்கும் கதை அது.” என சொல்லியிருந்தார். ஒருவேளை அந்தக் கதையின் மொத்த ஸ்க்ரிப்டுமே ரெடியாக இருந்து, அதை வேறு எந்த இயக்குநரிடமாவது கொடுத்து எடுக்கச் சொன்னால், அவர்களுக்கு வருமே ஒரு பதற்றம், “மகேந்திரன் சார் எடுக்க நினைச்சதை நான் எப்படி?” என்கிற கூச்சம். அது சொல்லும் காலம் முழுக்க மகேந்திரன் என்கிற மகா திரை ஆளுமையைப் பற்றி!
#RipMahendran #RipDirMahendran #TamilCinema
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?