Politics

"துணைவேந்தர்கள் விவகாரத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்"- ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் இதே பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

அங்கு மாநில அரசின் கீழ் இயங்கிவரும் 6 பல்கலைக்கழகங்களில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமித்து ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மேற்கு வங்க அரசு இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு வழங்கும் பட்டியலிலிருந்து தகுதிவாய்ந்த நபர்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமனம் செய்யவேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநருக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் துணைவேந்தர்கள் விவகாரத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

Also Read: பதிலுக்கு பதில் : ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்... போர்க்களமாக மாறும் மத்திய கிழக்கு !